Showing posts with label Advantages of learning Hindi. Show all posts
Showing posts with label Advantages of learning Hindi. Show all posts

Wednesday, October 28, 2009

இந்தி திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்:


மணற்கேணி-2009 கட்டுரைப் போட்டிக்காக அனுப்பியது,
பொது அறிவு 
பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)
இந்தி திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்:


முன்னுரை:

இந்திய துணைக்கண்டத்தில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி இந்தி. இதனடிப்படையில், ௧௯௩௮-ல் (1938) அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த திரு.ராஜகோபாலாச்சாரி அவர்கள் பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையை (தமிழ், ஆங்கிலம், இந்தி) கொண்டுவந்த போதும், நம்முடைய எதிர்ப்பின் காரணமாக அது திரும்பப்பெறப்பட்டது. பல்வேறு மொழிகள் உள்ள நிலப்பரப்பை ஒரு நாடு எனும் எல்லைக்குள் வரையறுக்கும் போது, மக்களை ஒன்றிணைக்கும் பாலமாக, ஒரு பொது மொழியின் அவசியம் கருதி, கொத்தாரி ஆணையக்குழு அளித்த அறிக்கையின்படி, நம் நாட்டின் அரசியல் சாசனத்தில் இந்தி அலுவலக மற்றும் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து நாம் ௧௯௬௫-ல் (1965) போராடினோம். அதன் விளைவாக, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக திகழட்டும் என்று அந்த சாசனத்தை அப்போதைய இந்திய முதன்மை அமைச்சர் திரு.ஜவஹர்லால் நேரு மாற்றியமைத்தார். அன்று முதல் இன்று வரை அந்த சாசனம் அவ்வாறாகவே உள்ளது.


தீமைகள் :

நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பேசும்/புரிந்து கொள்ளும் மொழியை மற்றவர் கற்றுக்கொள்ளாமல் சொந்த நாட்டுக்குள்ளேயே வேற்று நாட்டவரைப்போல் வாழ்கிறோம். இதனால் நாட்டின் ஒற்றுமை குலைகிறது. நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டினர் வெவ்வேறு மாகாணங்களுக்குச் செல்லும் போது மனம் குழம்பி விடுகின்றனர். இது இந்தியாவின் சுற்றுலாத்துறையை பாதிக்கிறது. அது மட்டுமல்லாமல் நாட்டின் மதிப்பை உலக நாடுகளின் நடுவில் வீழ்த்திவிடுகிறது.
இந்தி திணிப்பை எதிர்த்த போதும் நம் நாட்டில் வெளி மாநிலங்களில் வியாபாரம், கல்வி மற்றும் வேறு பல காரணங்களுக்காக செல்வோர் இந்தி தெரியாமல் இருந்தாலும் ஆரம்பத்தில் தட்டுத்தடுமாறி, பின்பு ஒரு நிலையாக தங்கள் சொந்த முயற்சியால் கற்றுக்கொண்டு விடுகின்றனர். நம் நாட்டின் வேகமான வளர்ச்சியையே இஃது ஆமை போல நகர்த்துகிறது. தமிழர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசு அலுவலகங்களில், தனியார் நிறுவனங்களில், பணி செய்து வாழ்கின்றனர். அவ்வாறு பணியில் இருப்பவர்கள் இந்தி அறியவில்லை எனும் காரணத்தால் அவர்களின் பதவி உயர்வுகளும், கிடைக்க வேண்டிய மதிப்புகளும் கிடைக்காமல் போகின்றன. தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் இந்தியை தாய் மொழியாக கொள்ளாதவரும் அதை பள்ளிப்பருவத்திலேயே ஆங்கிலத்தைக் காட்டிலும் செம்மையாகக் கற்றுக் கொண்டுவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் செல்லும் பணி இடங்களில், அலுவலகத்தில் இந்தியையே பொது மொழியாக அவ்விடத்தில் நிறுவியும் விடுகின்றனர். இதனால் பொது மொழியாக ஆங்கிலத்தை நம்பி வாழும் தமிழர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் அவரவர் தாய் மொழியில் பற்று இல்லாமல் இல்லை. இருப்பினும் அவர்கள் எல்லோரும் இந்தியை கற்றுக்கொண்டு இந்தியில் மட்டுமே தங்களுக்குள் உரையாடுகின்றனர். ஆங்கிலத்தை எழுத்து மொழி அளவில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மராத்தியர்களும், கன்னடர்களும் அவ்வப்போது தங்கள் மொழி உணர்வை வன்முறை மூலம் வெளிப்படுத்தினாலும் அவர்களும் இந்தியில் தான் நாடாளுமன்றத்தில் மக்களின் சிக்கல்களை, அரசின் நடவடிக்கைகளை தெரிவிக்கின்றனர். அவர்கள் ஆங்கிலத்தை நாடுவதில்லை. ஆங்கிலம் கற்பதற்கு எளிதானதாக, இந்தியா முழுவதும் பரவி இருந்தாலும் அது வேற்று நாட்டவன் மொழி, இந்தி நம் தாய் நாட்டின் மொழி என்பதை அவர்கள் நிலை நாட்டுகிறார்கள்.
சமீபத்தில் நமது நாட்டின் வேதி பொருட்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கோரி, அது அவைத் தலைவரால் மறுக்கப்பட்ட அவமானம் வேறு எந்த நாட்டிலும் காண முடியாத ஒன்று.

நன்மைகள்:

இந்தி ஒரு எளிமையான மொழி என்பதால், ஒருவேளை அது மொழிப் பாடங்களில் ஒன்றாக இருந்திருக்குமானால், இந்தியில் செம்மையாக எழுத/பேச கற்றுக்கொண்டுவிட்டு, ஈராயிரம் வருடங்களுக்கும் மேலாக தன் இலக்கண இலக்கியங்களை வளர்த்து கொண்டு செழுமையாக விளங்கி நிற்கும் நம் தாய் மொழித் தமிழை ஆழமுற கற்றுக்கொண்டிருப்போமா ! என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில், எளிமையான செயலைத்தானே நம் மனித மனம் எப்போதும் விரும்புகிறது.
தாய் மொழி வழிக் கல்வி தான் ஒரு மனிதனுக்கு சிறப்பான கல்வியாக இருக்க முடியும் என்பதைப் பல சான்றோர்கள் நிரூபித்து காண்பித்துள்ளனர். எந்த ஒரு கருத்தையும், கோட்பாட்டையும், செய்தியையும் கேட்ட/படித்த உடனேயே ஒருவருக்குப் புரிய வைக்க தாய் மொழி வழியே கற்றல் அன்றி வேறு எந்த ஒரு மொழியும் அவ்வளவு எளிமையாக நிறைவு செய்யாது. அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம், போன்ற பாடங்களை கற்பிக்கும் தாய் மொழிப்பாடத்தில் சரியான அளவு புலமை இல்லையேல் மற்ற பாடங்களைக் கற்கும் திறன் குறைந்து அது அறிவுக் கூர்மையை மழுங்கடித்துவிடக் கூடும்..
இந்தியாவில் பழமையும் புதுமையும் கூடிய ஒரு மொழி, தற்போதும் மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு மொழி, தமிழ் மட்டும் தான் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அத்தனை சிறப்புற்ற தமிழ் மொழியை " உயர் தனிச் செம்மொழி " என்ற உயர்ந்த நிலையில் வைத்துள்ளது நமது இந்திய அரசு. அதற்கு, ஒரு காரணமாக, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் இருந்துள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்தியை ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டும் அதனை, " ஏன் எதிர்க்கிறார்கள் ? " என்ற சிந்தனையை நடுவண் அமைச்சகத்தில் உள்ள வட நாட்டு அரசியலாளர்களுக்கு தூண்டியது, இந்த போராட்டம் தான். அதன் விளைவாக, தமிழையும் அதன் பழமையையும், வரலாற்றையும், இலக்கிய ஆழத்தையும் அறிய முற்பட்டனர், அதன் பின்னரே, " உயர்தனிச்செம்மொழி" தமிழ் என்பதை அறிந்தனர்.

நிறைவுரை:

மகாத்மா காந்தி அவர்களின் சிறு வயதில் அவருக்கு குஜராத்தி, ஆங்கிலம், இந்தி, பாரசீகம், அரபி ஆகிய மொழிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. " பல மொழிகளை கற்பதனால் நமக்கு தெரியாத வேற்று மொழிப் பேசுபவரைக் கூட அயல் நாட்டுக்காரனாக எண்ணும் நிலை ஏற்படாது. ஒற்றுமையும், மனித நேயத்தையும் அது வளர்க்கும்," என்று அண்ணல் காந்தி அடிகள் கூறியுள்ளார்.
திராவிட மொழிக்குடும்பத்தின் ஒரு மொழியை அதே குடும்பத்தில் உள்ள மற்ற மொழியினர் கற்றுக்கொள்வது மிக எளிது. இவ்வாறு தான் ஒவ்வொரு மொழிக்குடும்பமும் திகழ்கிறது. ஆனால் ஒரு குடும்பத்தில் உள்ள மொழியை மற்ற குடும்பத்தில் உள்ள மொழியினர் கற்க அந்த மொழிக்குடும்பத்தின் ஆணி வேர் முதல் தொடங்க வேண்டும். இதில் எளிமையும், கடுமையும் கற்க வேண்டிய மொழியின் செழுமையையும், இலக்கணத்தையும் பொறுத்து அமைகிறது.
இந்தி வடமொழியான சமஸ்கிருதத்தின் குடும்பத்தில் பிறந்த பிள்ளை ஆகும். தமிழ் சமஸ்கிருதத்திற்கு இணையான வயதும், செறிவும் நிறைந்த களஞ்சியம் ஆகும். இன்றைய கால கட்டத்திற்கும், நடைமுறை பயன்பாட்டிற்கும் உகந்ததாகும். சமஸ்கிருதம் தற்போது பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை. ஆனால் அதன் சந்ததியான இந்தி இன்றும் இந்தியாவில் பெருமளவு பேசப்படும் மொழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பெருமளவு மக்களால் பேசப்படும் மொழியை பொது மொழி என்று தீர்மானித்தல் என்பது தங்கச்சுரங்கத்தில் தங்கத்தை விடுத்து பெருமளவில் கிடைக்கும் மண்ணை அள்ளிகொள்வது போன்றதாகிவிடும். ஆகவே அது மற்ற மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழியினரும் எளிதில் பழக உகந்ததாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு நம் இந்திய நாட்டின் அலுவலக மற்றும் ஆட்சி மொழியாக தெரிவு செய்யப்பட்டது தான் இந்தி.
இந்தியின் எளிமையை அந்த மொழிக்குடும்பத்தில் இருந்து வந்த, குஜராத்தைச் சார்ந்த முன்னாள் இந்திய முதன்மை அமைச்சரும், அதை திறமையுடன் சமாளித்த நம் தமிழகத்தின் முதலமைச்சரும் பரிமாறிக்கொண்ட உரையாடலினால் நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒருமுறை மொரார்ஜி தேசாய், அறிஞர் அண்ணாவிடம் "இந்தி மொழியை மூன்று மாதங்களில் கற்றுக்கொண்டுவிடலாம்" என்றார், பெருமிதமாக!
" ஆமாம்! அதற்குமேல் கற்றுக்கொள்ள இந்தியில் என்ன இருக்கிறது?" என்று கேட்டார், அண்ணா. மொரார்ஜியால் பதில் சொல்ல முடியவில்லை.
இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியது; ஒன்று நம் தாய் மொழியை பொது மொழியாக பயன்படுத்த சட்டம் கொண்டு வர பாடு பட வேண்டும்.இல்லையேல், பொது மொழி ஆக்கப்பட்ட இந்தியை நாம் கற்க முயல வேண்டும்.